Thursday, 27 November 2014

தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..? அதன் நன்மைகள் என்ன?


1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!


வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும் விளக்கேற்றவேண்டிய நேரம் விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம் எந்தெந்த எண்ணைகளில்
விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!!!

கொஞ்சம் சிரிக்க...

இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்..

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார் அவர்.
மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட...நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ...


ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.
4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.
எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.
இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.
இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.
எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்


நம்ம ஆள் ஒருத்தன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது, ஒரு ரயிலில் பயணத்தின் போது பழக்க தோஷத்தில் எதிரே உள்ள சீட்டின் மீது கால் போட்டு சொகுசாக அமர்ந்த படி பயணம் செய்தார்.
இதை கண்ட ஓரு ஜப்பானியர் அவர் சீட்டை விட்டு எழுந்து வந்து உடனே நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்து கொண்டார்.
நம்ம‌ம் ஆளுக்கு ஒரு மாதரி ஆகிவிட்டது.
உடனே நம்ம ஆள், :ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ஜப்பானியர் சொன்னார், "நீங்கள் எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் கோவமாக இருந்தது. இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர். அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடிமேல் வைத்துக்கொண்டேன்" என்று சொன்னார்.
நம்ம ஆள் கூனிக்குறுகி அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார்.
அதற்கு அந்த ஜப்பானியர், இங்கு மட்டுமல்ல உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளும்படி சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார்.
இப்ப சொல்லுங்க நாம் ஏன் முன்னேற முடியவில்லை...??

காது கேட்கும் திறன் மங்கிய அந்த நான்கு வயது குழந்தை பள்ளி முடித்து வீடு திரும்பி வந்த போது தன் பாக்கெட்டில் ஆசிரியை எழுதித் தந்த சீட்டை தன் அம்மாவிடம் கொடுத்தது.
அந்தச் சீட்டில் “ உங்கள் மகன் மிகவும் முட்டாளாக இருக்கிறான். அவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது என்று“ .
அவனது அம்மா அந்தச் சீட்டைத் திருப்பி “ எனது மகன் முட்டாள் இல்லை. அவனுக்கு நானே கற்றுக் கொடுக்கிறேன் “ என்று எழுதி அம்மா கொடுத்தார்.
அந்தச் சிறுவன் அந்தச் சீட்டைக் கொடுத்த நாளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
பள்ளியில் மொத்தம் மூன்று மாதங்கள் மட்டும் படித்த அந்தக் குழந்தை யார் தெரியுமா ?
உலகின் தலை சிறந்த விஞ்ஞானி என்று சொல்லப்படும்
தாமஸ் ஆல்வா எடிசன் தான் அவர்.
அப்போதிருந்து வீட்டில் தன் மகனுக்கு பாடங்களைக் கற்றுத் தந்த இவர் அம்மா நான்சி எலியட்தான் உண்மையான சாதனையாளர்.
எடிசன் சொல்லும்போது “ என் அம்மாதான் என்னை உருவாக்கியவர்.
என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். வாழ்வதற்கு தைரியத்தை ஊட்டியவர்.
அவருக்கு நான் ஏமாற்றத்தை தரக் கூடாது என்று எண்ணினேன் “ என்று கூறினார்.


AMERICA : முதல் முறையா நாங்க தான் "MOON"ல கால் வச்சோம்.
GERMAN : நாங்க தான் "VENUS"ல கால் வச்சோம்.
JAPAN : நாங்க தான் "MARSH"ல கால் வச்சது.
AMERICA : ஹேய் இந்தியா,நீங்க எதுல கால் வச்சீங்க?
INDIA : நாங்க தான்டா "SUN"ல கால வச்சது.
AMERICA : டேய் பொய் சொல்லாதிங்க டா.SUN க்கு பக்கத்துல போனாலே நீங்க செத்துருவீங்க டா.
INDIA : அடிங்ங்ங்ங் கொய்யாலே.நாங்க போனது நைட்ல டா.
AMERICA : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......

Wednesday, 26 November 2014

நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா

கெளதம புத்தர் ஒரு வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு,
"இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.
அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை
பார்த்து சொன்னார்,
"ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால்
அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?"
என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை.
அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது
காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்,
"இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார்.
அவன் எழுந்து கேட்டான்
"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"
என்று.
அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்,
"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா?


குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?
அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.
சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

Friday, 21 November 2014

மனக்கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை...

வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின் சுயக்கட்டுப்பாடே, வெற்றியை தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான குழப்பங்களுக்கு ஆளாகிறார். தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில் படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது. உங்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத் தரும்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள் உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடிப்பாடி திரிந்து, இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் தங்களின் எதிர்கால மற்றும் நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை தொலைக்கின்றனர்.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள். எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, வெற்றி உங்களைத் தேடிவரும்.

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகிவிட்டாசே. வீட்டிலேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரிலிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

செல்வந்தரின் அறியாமை

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.
“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.
அதற்கு துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே”என்றார்.
“யார் அவன்? எப்போது சொன்னான்?” என்று செல்வந்தன் சீறினான்.
“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.
அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.
“இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” என்று கேட்டார் துறவி
“அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் செல்வந்தன்.
“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று துறவி கேட்டார்.
அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்த செல்வந்தன்.
துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.
செல்வந்தன் தனது அறியாமையை எண்ணி தலை குனிந்தான்

Tuesday, 18 November 2014

தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காணஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.
அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரியஅண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப்பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். "ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்."
' தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்'...

வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!
* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

Saturday, 15 November 2014

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.

Tuesday, 11 November 2014

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

* துளசி கஷாயம்

சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

* பனங்கற்கண்டு பால்

ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

* பொட்டுக்கடலை மிக்ஸ்

புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும். 
* தேங்காய்ப்பூ லேகியம்

ஒரு மூடி தேங்காய்ப்பூவை வெறும் சட்டியில் வதக்கிக்கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் வதக்கிய தேங்காய்ப்பூ, 50 கிராம் பனங்கற்கண்டை சேர்த்து வதக்கவும். லேகியம் பதத்தில் வரும் இதை அப்படியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும் இந்த லேகியத்தை, குழந்தைகளுக்கு உருண்டைகளாகச் செய்து கொடுக்கலாம். 

மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்

Friday, 7 November 2014

துளசியை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.

குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.

1ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.

துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.

புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.

50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.

துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்.