Friday, 21 November 2014

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகிவிட்டாசே. வீட்டிலேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரிலிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

செல்வந்தரின் அறியாமை

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.
“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.
அதற்கு துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே”என்றார்.
“யார் அவன்? எப்போது சொன்னான்?” என்று செல்வந்தன் சீறினான்.
“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.
அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.
“இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” என்று கேட்டார் துறவி
“அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் செல்வந்தன்.
“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று துறவி கேட்டார்.
அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்த செல்வந்தன்.
துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.
செல்வந்தன் தனது அறியாமையை எண்ணி தலை குனிந்தான்

Tuesday, 18 November 2014

தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காணஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.
அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரியஅண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப்பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். "ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்."
' தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்'...

வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!
* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

Saturday, 15 November 2014

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.

Tuesday, 11 November 2014

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

* துளசி கஷாயம்

சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

* பனங்கற்கண்டு பால்

ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

* பொட்டுக்கடலை மிக்ஸ்

புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும். 
* தேங்காய்ப்பூ லேகியம்

ஒரு மூடி தேங்காய்ப்பூவை வெறும் சட்டியில் வதக்கிக்கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் வதக்கிய தேங்காய்ப்பூ, 50 கிராம் பனங்கற்கண்டை சேர்த்து வதக்கவும். லேகியம் பதத்தில் வரும் இதை அப்படியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும் இந்த லேகியத்தை, குழந்தைகளுக்கு உருண்டைகளாகச் செய்து கொடுக்கலாம். 

மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்

Friday, 7 November 2014

துளசியை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.

குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.

1ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.

துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.

புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.

50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.

துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்.