Friday, 13 March 2015

பன்றி காய்ச்சலை தடுக்கும் கபசுர மூலிகை குடிநீர்

பன்றி காய்ச்சல் வடமாநிலங்கள் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெகு வேகமாக பரவி வருகின்றது. இந்த காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த காய்ச்சல் சில மாதங்களாக அதிகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு அரசும் பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், ஒரு சில இடங்களில் நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் பன்றி காய்ச்சலை தடுக்க கபசுர மூலிகை குடிநீரை பயன்படுத்துவது குறித்து தமிழ்நாடு சித்த மருத்துவர் அலுவலர்கள் சங்க தலைவர் பிச்சையாகுமார் கூறியதாவது:-


பன்றி காய்ச்சலை தடுக்க கபசுர மூலிகை பொடியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். டெங்கு காய்ச்சலுக்கு எப்படி நிலவேம்பு பொடி தடுப்பு சக்தியாக செயல்பட்டதோ, அதேபோல், இந்த கபசுர மூலிகை பொடியும் தடுப்பு சக்தியாக செயல்படுகிறது.


சுக்கு, திப்பிலி, இலவங்கம், நிலவேம்பு, நெல்லிவேர், சிறுதேக்கு, சிறுகாஞ்சொறிவேர், ஆடாதொடை, கற்பூரவல்லி, வட்டதிருப்பிவேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம், நெல்லிவேர் ஆகிய 15 வகையான மூலிகை பொருட்கள் இந்த மூலிகை பொடியில் அடங்கியுள்ளன.


இதை பொடியாக அரைத்து, 5 முதல் 10 கிராம் அளவில் எடுத்துக்கொண்டு 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து, 50 மில்லி லிட்டர் அளவு வரும் வரை சுட வைத்து பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும். தற்போது, தமிழ்நாட்டில் சித்த மருத்துவ கல்லூரிகளிலும், சித்த மருத்துவ ஸ்டோர்களிலும், இந்திய மருத்துவ கூட்டுறவு பண்டகசாலைகளிலும் இந்த மூலிகை பொடி கிடைக்கிறது. இதை அனைத்து சித்த மருத்துவ கல்லூரிகளிலும் இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


இவ்வாறு அவர் கூறினார்.


தற்போது பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக அதிகமான காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு எப்படி நிலவேம்பு குடிநீரை வழங்கினார்களோ, அதேபோல், ‘கபசுர’ மூலிகை குடிநீரையும் இலவசமாக வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment