Monday, 1 December 2014

அறிவுக்கதைகள்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
'அச்சமின்மையே ஆரோக்கியம்!'
'அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!

ஒவ்வொருவரின் பார்வைக்கும் உள்ள வேறுபாடு
ஒரு பாதையின் ஓரம் யோகி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அப்போது அந்த வழியே ஒரு மது அருந்தியவன் வந்தான்.
தியானத்தில் ஆழ்ந்து இருந்த யோகியை பார்த்து, ''இவனும் நம்மை மாதிரி பெரிய போதைக்காரன் போலிருக்கிறது. இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான். அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான். அவன் அவரைப் பாரத்தவுடன், ''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் தூங்குகிறான், பாவம்,'' என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் ஞானி ஒருவர் அங்கு வந்தார். அவர், ''இவரும் நம்மைப் போல ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும். தியானத்தில்
இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,'' என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.
இவ்வுலகில் நல்லவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் நல்லவராகவே பார்க்கின்றனர். தீயவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் தீயவராகவே பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment