Wednesday, 3 December 2014

வாழ்க்கையின் உண்மை

முயற்சி வெற்றி தரும்
ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஓர் நிபந்தனை விதிக்கிறது..
”நான் உன் பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம்
திரும்ப வேண்டும் என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும்
பின்னால் திரும்பி பார்க்ககூடாது.” அப்படி பார்த்தால் கற்சிலையாகி விடுவாய் என்கிறது..
முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..
என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதலாமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறியதால் கற்சிலையாகி விடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..
கிட்டத்தட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்சிலையாகி விடுகிறான்..
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின்வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான்
வெற்றியும் பெற்று மூலிகையும் கைபற்றுகிறான்..
பின்னால் வரும் தேவதை தான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும்.
அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது...


மனசு சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.
அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.
அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.
மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.
‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.
நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
''நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.''


ஒரு வீட்டில் ஜன்னல் அருகே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
‘அது என்ன மகனே?’ என்று கேட்டார் தந்தை.
‘அப்பா, அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
‘அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். ‘காகம்!’ என்றான்.
நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?’ என்று கேட்டார்.
மகனின் கோபம் எல்லை கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே’ என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.
தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
‘இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.
காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.
அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.
இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.
மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.


அறிந்துகொள்வோம்...!
---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள்.
---►மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
---►இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
---►நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
---►பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.
---►இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.
---►நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்
---►காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.
---►உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.
---►ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
---►மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.
 

No comments:

Post a Comment