Monday, 21 July 2014

சமையலறை சமாளிப்புகள்

Posted Image


இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.


"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.


தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.





...செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
 

No comments:

Post a Comment